tamilnadu

img

குஜராத் கலவரத்தை அம்பலப்படுத்திய சஞ்சீவ் பட்டின் உருக்கமான கடிதம்

குஜராத் மாநிலத்தில் 1990களில்  ஜாம்நகரின் மூத்த காவல்துறை கண்காணிப்பு அதிகாரியாக சஞ்சீவ் பட் பதவியில் இருந்தார். அப்போது இந்துத்துவா அமைப்பு ரதயாத்திரையின் என்ற பெயரில் திட்டமிட்டு கலவரத்தில் ஈடுபட்டது, கலவரத்தில் ஈடுபட்ட 100 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பிரபுதாஸ் மாதவ்ஜி வைஷ்ணவி என்பவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். பிரபுதாஸ் மாதவ்ஜி மரணத்திற்கு சஞ்சீவ் பட் மற்றும் பிற அதிகாரிகளே காரணம் என பிரபுதாஸ் மாதவ்ஜின் சகோதரர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் தற்போது ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சஞ்சீவ் பட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
ஆனால் சஞ்சீவ் பட் சிறையில் அடைக்கப்பட்டதற்கு உண்மையான காரணம் குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு நடந்த கலவரத்தை அனுமதிக்குமாறு முதல்வர் நரேந்திர மோடி அம்மாநில காவல்துறைக்கு உத்தரவு வழங்கியதாக சஞ்சீவ் பட் உச்ச நீதிமன்றத்தில் தைரியமாக சாட்சியளித்தார். இதனையடுத்து அவதூறு தெரிவித்ததாக அவர் கைது செய்யப்பட்டார். உயர் பதவியில் இருந்த சஞ்சீவ் பட், அவருக்கு கீழ் பணிபுரிந்த ஒரு காவல்துறை அதிகாரியிடம், மோடிக்கு எதிராக சாட்சியமளிக்கும் படி பலவந்தப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த புகார் அடிப்படையில் சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டிருப்பதாக குஜராத் அரசு தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் இது உண்மையல்ல என குஜராத் மாநிலத்தின் முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீகுமார் மறுத்துள்ளார். நரேந்திரமோடிக்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றம் வரை சென்று சாட்சி அளித்தற்காகவே சஞ்சீவ் பட் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதாக முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார். 
குஜராத் மாநில முதல்வராக இருந்த மோடியின் முகத்திரையை கிழித்த சஞ்சீவ் பட் தற்போது  சிறையில் அடைக்கப்பட்டு அதிகார வர்க்கத்தின் வஞ்சகத்தால் பழிவாங்கப்படுகிறார். 
இந்நிலையில் சிறையில் இருந்து சஞ்சீவ் பட் தனது மனைவி, குழந்தைகள், மற்றும் நண்பர்களுக்கு எழுதி உள்ள உருக்கமான கடிதம்

இடம்: இருண்ட இதயத்திலிருந்து…
தேதி: போரில் மற்றும் ஒரு நாள்

மிக மிக அன்பான ஸ்வேதா, ஆகாஷி,ஷாந்தனு மற்றும் நண்பர்களுக்கு,


ஸ்வேதா உனக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு இப்பொழுதுதான் கடிதம்   எழுதுகிறேன். கடைசியாக தேசிய காவல் துறை பயிற்சி நிலையத்திலிருந்து எழுதினேன். இது நேரம் எப்படி பறந்துள்ளது என்பதை உணர்த்துகிறது. நமது கனவுகளை பகிர்ந்து கொள்ளும் பயணம் நேற்று தொடங்கியதுபோல் தெரிகிறது. ஆனால் இது எவ்வளவு அழகனான பயணமாக இருந்திருக்கிறது. பிரியமானவளே, நான் என் உணர்வுகளை வெளிப்படையாக தெரிவித்து கொண்டது இல்லை. ஆனால் இப்போது ஒரு முறை சொல்கிறேன். இந்த பயணத்தில் நீ ஒரு அற்புதமான இணை பயணியாக இருந்துள்ளாய். 

நான் இன்று எதுவாக இருக்கிறேனோ அது உன்னால் மட்டுமே. நீயே என் பலமாகவும் உத்வேகமாகவும் இருக்கிறாய். எல்லா இன்னல்களுக்கும் எதிரான என் ஆர்வம் மற்றும் லட்சியத்திற்காக எரியும் உலையின் எரிபொருளாக நீ இருக்கிறாய். நாம் பல அற்புதமான நேரத்தையும் அழகான நினைவுகளையும் பகிர்ந்து இருக்கிறோம். நாம் கடினமான நேரங்களையும் அலட்சியமாக எதிர்கொண்டிருக்கிறோம். வாழ்க்கை பயணத்தில் ஒருவரோடு ஒருவராக (ஒன்றுக்குள் ஒன்றாக) இருந்து வாழ்வின் உச்சத்திலும் சரி! அடி மட்டத்திலும் சரி! ஒவ்வொரு நொடியையும் சந்தோசமாக கடந்திருக்கிறோம். என்றென்றும் உன்னை காதலிக்கிறேன்...   யுகம் யுகமாய்...

பிரியமான சகியே உனக்கு அல்லது குழந்தைகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக எளிதானதாக இல்லை. அதிகாரத்தில் இருப்போரின் பழிவாங்கும் போக்கு காரணமாக எனது தன்மானத்தை காத்து கொள்ள நிமிர்ந்த தலையுடன் இந்திய காவல் சேவையில் இருந்து வெளியேறுவது என நான் தீர்மானித்த பொழுது எனது முடிவுக்கு துணையாக நின்றீர்கள். என்ன மாற்று என எனக்கே தெரியாத அந்த தருணத்திலும் என்னுடன் உறுதியாக இருந்தீர்கள். இப்போதும் கூட நான் எங்கே போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை.  நம் அனைவரையும் விட ஒரு பெரிய காரணத்திற்காக நான் எடுத்த அந்த முடிவிற்கு எல்லோரும் விரும்பியே விலை கொடுக்க தயாராக இருக்கிறீர்கள். 
பிரியமான சகியே கடந்த ஒரு வருடம் உனக்கு கற்பனை செய்ய முடியாத அளவு கடினமாக இருந்திருக்க வேண்டும். சட்ட ரீதியாக மறுசீரமைக்கப்பட்ட நமது வீட்டின் ஒரு பகுதியை நாம் ஏற்றுக்கொள்ளவே முடியாத வகையில் சட்ட விரோதமாக இடித்தனர். இந்த இடிப்பை எதிர்த்து வழக்கு பதிவு செய்ய முறையான வாய்ப்பை கூட கொடுக்காமல் வீடு இடிக்கப்பட்டது.  கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து எல்லாம் துவங்கியது.  நீ ஆசையால் உருவாக்கி அதிக அன்பால் கட்டி எழுப்பிய  அந்த வீட்டை மோசமான அரசாங்கத்தின் கைக்கூலிகள் இடித்து தள்ளியபோது உதவியற்ற நிலையில் நீ பார்த்துக்கொண்டிருந்தது எத்தனை வலி மிகுந்த தருணமாக இருக்கும் என்பதை என்னால் மட்டுமே கற்பனை செய்ய முடியும். கடந்த 24 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் முற்றிலும் பொய்யாக புனையப்பட்ட ஆதாரங்களால் நான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து எல்லாம் நடந்தது.  ஆம் நிச்சயமாக, தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு 18 நாட்கள் கழிந்து இறந்த மரணத்திற்கு  வெட்கமில்லாமல், அநியாயமாக, ஒருதலைபட்சமாக லாக்கப் மரணமாக புனையப்பட்ட 29 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு .
அனைத்து கஷ்டங்களையும் உன்  அமைதி மற்றும் மன வலிமையின் துணையுடன் தனி ஆளாக எதிர்கொள்கிறாய்.   அநீதிக்கு எதிராக நின்று போராடும் உன் தைரியம் வலிமை மற்றும் உறுதிப்பாட்டை நாடு முழுவதும் இன்று பார்த்துக் கொண்டிருக்கிறது. 
திட்டமிட்டு அரங்கேற்றும் வன்முறையின் குவிமையமாக அரசே உருவாகியுள்ள நிலையை இன்று இந்தியா எட்டி உள்ளது.  குண்டர்கள் ஆட்சி அரசாங்கத்தின் ஆட்சியாக செயல்படும் உத்தியாக மாற்றப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் கண்காணிப்பு குழுக்கள் என அழைக்கப்படும் அனைத்தும் அச்சமூட்டப்பட்டு கடும் அடக்கு முறைக்கு அடிபணிய நிர்பந்திக்கப்பட்டுள்ளன. இந்த காலங்களில் நம்மைச்சுற்றி உள்ள அனைத்து நிறுவனங்களும் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டு செயல் இழக்கச் செய்யப்பட்டுள்ளது. எந்த நிறுவனமோ அல்லது அமைப்புகளோ பாதுகாப்பாக இல்லை. நமது நாட்டின் நீதிமன்றங்கள் வெளிப்படையாக தீர்ப்பளிக்கின்றன. ஆனால் அந்த தீர்ப்பில் சமமான உண்மையும் நீதியும் உள்ளடங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்பது தெரிந்தே அநீதிக்கு எதிராக எழுந்து நிற்பதற்கு நீ தயாராகி இருக்கிறார். உனது இந்த தைரியம் பலரின் முதுகெலும்பை திடப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். இந்த இருண்ட காலத்தில் உனது வீரம் நிறைந்த போராட்டம் கலங்கரை விளக்கமாக செயல்படலாம் என நம்புகிறேன்.

ஆகாஷி என் அன்பு மகளே… குட்டி வீராங்கனையே,

 எப்போதும் என்னை சாய்க்க எதிரிகள் தயாராக இருக்கிறார்கள். என் எதிரிகளுக்கு எதிராக பாய்வதற்கு எப்பொழுதும் தயாராக இருக்கும் என் தேவதையே!
 அம்மாவும் நானும் சின்ன  சண்டைகள் போடும்போது எண்ணற்ற முறை நீ என் பாதுகாப்புக்காக கண்மூடித்தனமாக குதித்தாய் என்பதை நான் நினைவில் கொள்கிறேன்.  இப்போது நீ ஆக்ஸ்போர்டில் பல்கலை கழகத்தில் உன் கல்வி வாழ்க்கையைத் தொடர்ந்தாலும் உன் இதயம் மனம் மற்றும் ஆன்மா எல்லாம் என்னோடு இருக்கிறது என்பதை நான் உறுதியாக அறிவேன். எனது தற்போதைய போரின் ஒரு பகுதியாக நீ இந்தியாவுக்கு திரும்ப இயலாமல் இருப்பது உனக்கு எவ்வளவு கடினமாக இருந்திருக்க வேண்டும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. என் அன்பு மகளே உனக்கு நன்றாகத் தெரியும் இது நான் தேர்ந்தெடுத்திருக்கும் போர். எனது தேர்வு உன் வாழ்க்கை பாதையை சிக்கலாக்குவதை நான் விரும்பவில்லை. அம்மாவும் நானும் உன்னை போன்ற அன்பான மகளை பெற உண்மையிலேயே ஆசீர்வதிக்கப் பெற்றிருக்கிறோம். நீ எப்போதும் என்னுடன்  இருக்கிறாய். எனது ஆர்யா ஸ்டார்க்காக (தவறு செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துபவள்) எப்போதும் இருப்பாய். உனக்கு எல்லா அன்பும் மகிழ்ச்சியும் வெற்றியும் கிடைக்க நான் மனதார வாழ்த்துகிறேன்.

எனது ஓட்டப்பயிற்சி, வாலிபால், மற்றும் பெருந்தீனி கூட்டாளியே  ஷாந்தனு,

ஷான்  கவலையற்ற மகிழ்ச்சியான அதிஷ்டசாலி பையனாக சுற்றிய நீ கடந்த ஒரு வருடத்தில் பொறுப்பான இளைஞனாக உருமாறி அம்மாவின் பக்கத்தில் நிற்பதை நான் பார்க்கின்றேன்.  கடந்த ஓராண்டாக நீ இல்லையென்றால் அம்மாவிற்கு எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்பதை நான் எண்ணி பார்க்கிறேன். நீ அம்மாவுடைய பலத்தின் தூணாக இருக்கிறாய். உனது கடமையை ஆற்றியதற்காக உனக்கு எனது நன்றிகள்

ஷான் எனது ஒவ்வொரு தேர்விலும் உள்ள அபாயங்களையும், விளைவுகளையும் அறிந்தே நான் தேர்வு செய்தேன். அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் மீது சுமத்தப்படும் அவதூறுகள், துன்புறுத்தல்கள் மற்றும் இடையூறுகள் நான் தொடர்ந்து சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. ஆனால் எனது பாத்திரத்தை உன்னுள் புகுத்தி விட்டேனோ என்று சில நேரங்களில் குற்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனாலும் நீ தற்போது மாறி இருக்கும் நிலையைப்பார்க்கும் போது நான் மிகவும் பெருமை படுகிறேன். நீ தொடர்ந்து மகிழ்ச்சியை  பரப்பவும், உன் வாழ்க்கையில் நீ எங்கு சென்றாலும் போராடி வெற்றி பெறவும் நான் இதயப்பூர்வமாக விழைகிறேன்.

கடைசியாக சில வார்த்தைகள்

இருண்ட  நேரத்தில் என்னுடனும் எனது குடும்பத்துடனும் நிற்கும்  துணிச்சலான  நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.  நீங்கள் ஒவ்வொருவரும் நான் சிறந்தவராக இருக்க என்னை மட்டும் ஊக்கப்படுத்தவில்லை. தற்போது ஸ்வேதாவிற்கும் தேவையான அதிக பலத்திற்கான ஆதாரமாக  இருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் அவளுடைய தைரியத்தை அதிகரித்துள்ளீர்கள். இந்திய ஜனநாயகத்தை தாழ்த்துவதற்காக அச்சுறுத்தும் தீமையை எதிர்த்து போராடும் அவளின்  தீர்மானத்திற்கு நீங்கள் ஒவ்வொருவரும் வலு சேர்ந்துள்ளீர்கள். அதிகாரத்தில் உள்ள குண்டர்கள் உண்மையின் குரலை இழிவுபடுத்தி, காரணங்கள்(நியாயங்கள்), மற்றும் கருத்து வேறுபாடுகளை  அடக்கி ஒழிக்க முயல்கிறார்கள்.
இது இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலம் ஆகும். சர்வாதிகாரத்தின் கொடுங்கோன்மை அடக்குமுறை ஒரே இரவில் வரவில்லை. இந்த இருள் நமது அறியாமை மற்றும் அக்கறையின்மையை உணர்த்துகிறது.  மோசமான ஆட்சியில் வெறுப்பு மற்றும் பொய்யை வளர்த்து நலன்களுக்காக சேவை செய்யும் ஒவ்வொரு நிறுவனமும் (அமைப்பும் ) ஒன்றன் பின் ஒன்றாக தகர்த்து எரியப்பட்டதை இந்தியர்களாகிய நாம் அமைதியாக நின்று பார்த்தோம். தனி மனிதன் அல்லது ஒரு அரசியல் கட்சியின் கருத்தை தேசத்தின் கருத்தாக இணைக்க நாம் அனுமதித்தோம். இதனால் அந்த கருத்திற்கு எதிராக கேள்வி கேள்வி கேட்டாலும் அவர்கள் மீது தானாகவே தேச விரோதி முத்திரை குத்தப்படுகிறது. 
நண்பர்களே இந்தியா ஒரு முக்கியமான மற்றும் ஆபத்தான காலகட்டத்தில் உள்ளது. நாம் தெரிவு செய்யும் தீர்மானங்களே அடுத்த சில பத்தாண்டுகளுக்கான தலைவிதியை தீர்மானிக்கும். நம்மில் யாரும் இனி ஒரு பார்வையாளராக இருக்க முடியாது. நாம் இனி சண்டையிட வேண்டியிருக்கும். அரசியல் என்பது பார்வையாளர் விளையாட்டல்ல. நாம் அரசியலைத் தவிர்க்கலாம். ஆனால் அரசியல் நம்மை தவிர்க்காது. இந்த குண்டர்களை அனைத்து மட்டங்களிலும் எதிர்த்து போராட நாம்  தீர்மானிக்க வேண்டும். இந்த குண்டர்கள் ஆட்சியதிகாரத்தைக்கொண்டு நுட்பமான முறையில் தங்களை உயர்த்திக் கொள்ள அனுமதிக்க கூடாது. அதிகாரத்தில் இருக்கும் குண்டர்களை கீழ் இறக்க நாம் (என்ன விலை வேண்டுமானாலும்) விலை கொடுக்க இருக்கும். நாம் சில கடினமான தேர்வுகளை எடுக்க வேண்டியிருக்கும். ஆனால் கடைசியாக நாம் செய்யும் தேர்வுக்கான விலையை நாம் மட்டுமே கொடுக்க வேண்டும். உங்களையும் என்னையும் போல்  மக்கள் ஆபத்தான முடிவை  எடுக்க தயாராக இல்லையெனில் நாம் நம்பிக்கொண்டிருப்பது போல் இங்கு எதுவும் மாறாது. ஒவ்வொரு முறை நாம் பார்க்கும் உண்மையை  பேசாமல் இருப்பதை தேர்வு செய்யும் பட்சத்தில் நாம் இறப்பது இன்னும் அதிகரிக்கும்.
நியாயத்திற்காக நிற்க வேண்டிய மனிதர்கள் எதுவும் செய்யாமல் அமைதி காப்பதுதான் தீமை வேர் பிடிக்க காரணமாக அமைகிறது. நாம் வாழும் ஜனநாயகத்தில் தீமைக்கும் அநீதிக்கும் எதிராக எழுந்து நிற்பது கட்டாயமில்லை. மக்கள் ஞானம் மற்றும் தைரியத்தோடு சரியாக தேர்வு செய்வார்கள் என்று நாம் நம்பிக்கையோடு எதிர்பார்ப்போம். நண்பர்களே இந்திய ஜனநாயகத்தை சுற்றிய சூரியன் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் அஸ்தமிக்கிறது. ஆனால் உங்களைப் போன்றவர்கள் மீது இந்தியாவுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. தீய சக்திகளுக்கு எதிராக போராடும் பொழுது எதிர்ப்பின் எந்த செயலும் அற்பமானவை அல்ல. எந்த சண்டையும் மிகச் சிறியதல்ல. மிகப்பெரிய பனிப்பாறை சரிவுகளும் மிகச் சிறிய பனித்திவலைகளால் உருவானதே. நாம் எதிர்ப்போம் நாம் போராடுவோம். நாம் கடந்து வருவோம். அது நிச்சயம் 

டன் கணக்கான அன்பு மற்றும் நன்றியுடன் 
தொடர்ந்து வளையாத, 
வளைந்து கொடுக்காத 
மற்றும் அடிபணியாத
சஞ்சிவ்பட் ஐபிஎஸ்

இலட்சியத்துடன் வாழ். வாழ்வின் கடைசி புள்ளி வரை நடந்து செல். கடினமாக மோதுவதற்கு தயங்காதே. அளவில்லாமல் சிரி, வருத்தம் இல்லாமல் தேர்வு செய், நீ விரும்புவதை செய். வாழ்வின் அனைத்தும் அதில் இருப்பது போல் வாழ்.

தமிழில் : எம்.பாண்டீஸ்வரி

;